சுசாந்த் தற்கொலைக்கு பின்னர் பாலிவுட்டில் நடைபெறும் நெபோடிஸம் குறித்த பேச்சு சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் பலரும் நெபோடிஸம் குறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகையில், பிரபல இயக்குனர் பால்கி வாரிசு நடிகர்களுக்கு ஆதரவு தரும் வகையில் பேசியுள்ளார். அவர் சமீபத்தில் பேசியுள்ள பேட்டியில், “ஆலியா பட், ரன்பீர் கபூரை விடச் சிறந்த நடிகர்களைக் காட்டுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தக் கருத்துக்கு இயக்குனர் ஷேகர் கபூர், எடிட்டர் அபூர்வா அஸ்ரானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தொகுப்பிற்காக தேசிய விருது வென்ற அபூர்வா அஸ்ராணி, “மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான், கங்கணா, ப்ரியங்கா சோப்ரா, டாப்ஸி, வித்யா பாலன். பிரபலமான பாலிவுட் குடும்பங்களைத் தாண்டி பார்த்தால் இத்தனை பேர் இருக்கின்றனர். எனக்கும் ஆலியா மற்றும் ரன்பீரைப் பிடிக்கும். ஆனால், அவர்கள் மட்டுமே சிறந்த நடிகர்கள் அல்ல.
பங்கஜ் திரிபாதி, ஜெய்தீப், நவாசுதீன், ஸ்வேதா திரிபாதி, அடக் கடவுளே... நம்மிடம் இருக்கும் திறமையான நடிகர்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே 3, 4 பெயர்களை திரும்பத் திரும்பச் சொல்வதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.