தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் நந்தினியின் உயர்கல்விக்கு உதவுவதாகவும் அதற்கேற்ற கல்வி நிறுவனங்களை விசாரித்து பரிந்துரை செய்வதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நந்தினியை பாராட்டி அவருக்கு தங்கப் பேனாவை பரிசளிப்பதாக பதிவு செய்தார். இந்த நிலையில் அவர் குறிப்பிட்டதைப் போல நந்தினி வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு தங்கப் பேனாவை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் வைரமுத்து.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாணவி நந்தினி வைரமுத்துக்கு நன்றி கூறி ஒரு கவிதை சொல்லியுள்ளார். "மின்னியது கவிகுலத்தின் வைரம் என் வீட்டில், அதனால் இருளெல்லாம் அகன்று ஒளிர்கிறதே என் வைய்யம். என் நன்றிகளை வார்த்தையால் விவரிக்க முடியாத நான் வேறு வழியின்றி கவிதை தொடுத்து அவருக்கு என் நன்றிகளை உரித்தாக்க விரும்புகிறேன். நன்றி அய்யா" என்றார். உடனே அருகில் இருந்த வைரமுத்து, "இந்த கவிதைக்கு ஒரு தங்கப் பேனா கேட்டு விடுவாய் போலிருக்கே..." என சிரித்தபடியே கேட்டார்.