Skip to main content

"கடவுளை சந்தித்தோம்" ; ராஜமௌலி நெகிழ்ச்சி; கீரவாணி ஆச்சரியம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

ss rajamouli and keeravani meet Steven Spielberg

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி. 

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், சிறந்த பாடல் பிரிவில்  'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் கீரவாணி விருதைப் பெற்றார். இது தொடர்பாக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவையும் கீரவாணியையும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்த நிலையில் ராஜமௌலி புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆச்சரியத்துடன் கன்னத்தில் கை வைத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் "நான் இப்போது கடவுளை சந்தித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜமௌலியுடன் இசையமைப்பாளர் கீரவாணியும் உடன் இருந்துள்ளார். 

 

கீரவாணி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்து, அவருடைய காதுகளில் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்னேன். அவர் நாட்டு நாட்டு பாடலைப் பிடிக்கும் என சொன்னார். என்னால் அதை நம்ப முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்