
பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவா தலைமையில் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை(22.02.2025) நடைபெறுகிறது. முதன் முறையாக பிரபு தேவா நேரடி நடன நிகழ்ச்சி நடத்தவுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் ஷாந்தனு, சிருஷ்டி டாங்கே, யாஷிகா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரபுதேவா இசை நிகழ்ச்சியில் என்னைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் ஆதரவாளர்களுக்கு நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா சாருக்கு எதிராக அல்ல. நான் அவருடைய தீவிர ரசிகர். இருப்பினும், பாகுபாடு மற்றும் ஒரு சார்பு நிலை பக்கம் என்னால் நிற்க முடியாது. பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த போதிலும் இன்னும் தகுதியானவராக மாற்ற போராட வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் ஏமாற்றமளிக்கின்றன, இவைதான் எனது முடிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள்.
பிரபுதேவா சாரை கொண்டாட எனக்கு ஒரு நிகழ்வு தேவையில்லை - எதுவாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் அவரைக் கொண்டாடுவோம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு கொண்டாட்ட நினைவாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. இது நான் கேட்கும் மன்னிப்பு அல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்தான விளக்கம். அடுத்த முறை சிறந்த ஒரு நிகழ்ச்சியில், எனக்குரிய மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் குழு, திட்டமிடலில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கலாம் என்பதுதான் எனக்கு ஒரே விருப்பமாகும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான் கலந்து கொண்டதில் நிறைய கற்றுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.