
செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பாக நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். அப்போது சூரி பேசுகையில், “வெற்றிமாறன் எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார். சினிமாவில் ஒன்னுமே இல்லாமல் வந்து இப்போது சக்திக்கு மீறி சம்பாதித்துவிட்டேன். இனிமேல் பிடித்த படங்கள் பண்ணிணால் போதும். விடுதலை படம் கொடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் மீண்டும் இணைந்தது அவருக்கு நான் செய்ய வேண்டிய நியாயம் . அதற்கும் வெற்றிமாறன் ஒரு காரணம். விடுதலைக்கு பிறகு கருடன் படத்திலும் அவரின் பங்கு அதிகமாக இருந்தது. இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் மாமன் படமும் நல்லா வரும் என கதையைக் கேட்டு நம்பிக்கை கொடுத்தார். சில திருத்தங்களும் சொன்னார். அதையும் படக்குழுவிடம் சொல்லியிருக்கேன்.
மண்டாடி படத்தில் வரும் விளையாட்டு இப்போதுதான் எனக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு போல் அதுவும் ஒரு வீரமான விளையாட்டுதான். ஜல்லிக்கட்டு தரையில் நடக்கும். இது கடலில் நடக்கும். கடலின் அலைகளை எதிர்கொண்டு இயற்கையோடு போராடி உயிரை பெரிதாக நினைக்காமல் வீரமாக நினைக்கும் விளையாட்டு இது. இந்த விளையாட்டு வெளியுலகத்துக்கு தெரியாமலேயே இருந்திருக்கு. இதை படமாக்குவதில் ஒரு தமிழனக்கு இன்னொரு தமிழன் கொடுக்குற மரியாதையாக நினைக்கிறேன். அவர்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கலாமென நினைக்கிறேன். அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி” என்றார்.