சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா போன்ற நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. உலகம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகிய இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சூரி பேசுகையில் “இப்படி ஒரு படத்தில் நான் இருக்கிறேன் என்பது சந்தோஷம். நிறையப் படங்கள் நடித்துள்ளேன் அதற்கான பாராட்டுகளையும் நான் பெற்றுள்ளேன். ஆனால் இந்த படத்தைப் பாராட்டி தலை சிறந்த இயக்குநர்கள் பேசும்போது சந்தோஷமாக உள்ளது. அவர்கள் ஒவ்வொரு முறையும் என் பெயரை சொல்லும்போது நான் தானா? என்று சிலிர்ப்பாக இருந்தது. இதெல்லாம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இது என் அப்பா, அம்மா செய்த புண்ணியம்தான். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர் என எல்லோரும் கொட்டுக்காளி படம் வரை என்னை கொண்டு வந்து விட்டுள்ளனர். அதற்கு நான் மிகவும் நன்றிக் கடன்பற்றுள்ளேன். நான் கூழாங்கல் படத்திற்குப் பெரிய ரசிகனாக இருந்தேன். அப்படிப்பட்ட இயக்குநரின் படத்தில் நடித்ததில் இறைவனுக்கு நன்றி.
அமெரிக்காவிற்கு விசா வாங்குவதற்காக அலுவலகம் சென்ற பதற்றத்தைவிட, என் படத்தைப் பார்க்க வந்த இயக்குநர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ? என்ற பதட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் படத்தைப் பாராட்டினார்கள், இதைவிட என்ன வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. கண்டிப்பாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும். மிஷ்கின் சொன்னது அத்தனையும் உண்மை. அதைவிட அதிகமாகப் படம் பார்க்கும்போது இயக்குநர்கள் சொன்னார்கள். தேனி, மதுரை எனச் சென்றுகொண்டிருந்த என்னை பெர்லின் போன்ற வெளிநாடுகளுக்கு இந்த படம் அழைத்துச் சென்றது. அங்கு சென்று நான் சந்தோஷமாக இருக்கும்போது என் அம்மா கால் செய்து ‘எங்கடா இருக்க’ என கேட்டார், நான் பெர்லின்னில் இருக்கிறேன் என்று சொன்னதும் ‘அது யாரு?’ என்று கேட்டார், நான் விருது வாங்க வெளிநாட்டில் இருக்கேன் என்று கூறினேன். அதன் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்டபோது, ‘கோடாரி தைலம் இருந்தா வாங்கிட்டு வா பா... முட்டி வலிக்குது’என்றும் ‘டார்ச் லைட் வாங்கிட்டு வா’என்றும் சொன்னார். என் அம்மாவிற்கு அவ்வளவுதான் தெரியும்” என்று கலகலப்பாக பேசினார்.
மிஷ்கின் பேசும்போது, “என் மகள் பிறக்கும்போது எவ்வளவு சந்தோஷபட்டேனோ அந்த அளவிற்கு இந்த படத்தை பார்த்து சந்தோஷப்படுகிறேன். இப்படம் என் தாயின் கருவறை மற்றும் என் மகளின் யோனி. சூரி காமெடியனாக உருவாகி இன்றைக்கு உலகம் போற்றும் நடிகராக மாறியுள்ளார். இந்த படத்தில் சூரியை தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்படத்தில் சூரி ஒரு இடத்தில் மூத்திரம் அடித்துள்ளார். அதில் அவர் நடிக்கவே இல்லை வாழ்ந்துள்ளார். அந்த காட்சியில் நான் கேமராவை கீழே காண்பித்துவிடுவார்கள் என்று பயந்துவிட்டேன். ஆனாலும் கிழே பார்க்கலாம் என்று ஆசையும் வந்தது. ஆனால், மேலேயே கேமராவை வைத்துள்ளனர். என்ன ஒரு நடிப்பு, எவ்வளவு நம்பிக்கை அந்த கேமரா மீது. இந்த படத்திற்குப் பிறகு சூரியை இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக பார்க்கலாம்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.