தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சோனு சூட். கரோனா லாக்டவுன் சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்தவர். இதனை தொடர்ந்து உதவி தேவைப்படும் பல ஏழைகளுக்கு உதவி வருகிறார் சோனு.
இந்நிலையில், சோனுவுக்கு மும்பை ஜூஹூ பகுதியில் 6 மாடிக் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த 6 மாடிக் கட்டிடத்தைதான் கரோனா காலத்தில் தனிமை முகாம் வசதிகளுக்காக சோனு சூட் அளித்திருந்தார். குடியிருப்பாக இருந்த 6 மாடிக் கட்டிடத்தை மாநகராட்சியின் முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றிவிட்டதாக சோனு சூட் மீது மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் போலீஸிலும் புகார்ளிக்கப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சோனு சூட் ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் கூறுகையில், “மும்பை மாநகராட்சியிடமிருந்து இதற்கான ஒப்புதலை நான் ஏற்கனவே பெற்றுள்ளேன். ஆனால் கரோனா அச்சுறுத்தலால் அதற்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. ஆனால் இதில் எந்தவித முறைகேடும் இல்லை. நான் எப்போதுமே சட்டத்தை மதிப்பவன். தொற்று காலத்தில் இந்த கட்டிடம் கரோனா போராளிகளுக்காக பயன்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்காவிடில் இதை மீண்டும் வீடாகவே மாற்றிவிடுவேன். மும்பை மாநகராட்சியின் புகாருக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்” என்றார்.