நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் படம் 1997-ஆம் ஆண்டு வெளியான 'லவ் டுடே'. இந்த படத்தின் இயக்குநர் பாலசேகரன் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் 'லவ் டுடே' படத்தில் இடம்பெற்ற 'என்ன அழகு எத்தனை அழகு' மற்றும் 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' பாடல்கள் உருவான விதம் பற்றி அவர் கூறியவை பின்வருமாறு...
"படத்திற்கு புது மியூசிக் டைரக்டர் சிவா. சௌத்ரி சார் சிவாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல நானே சின்ன பையன். சிவா என்னை விட சின்ன பையனா இருந்தார். ஆனா, அவர்கிட்ட ஒரு ஃபயர் இருந்தது. அது பார்க்கும் போதும் பேசும் போதும் தெரிந்தது. பிறகு பாடலோட சூழல சொன்னோம். கதாநாயகியை எப்படியாவது கிட்ட நெருங்க முடியுமா என யோசித்து கொண்டிருக்கும் கதாநாயகன். கதாநாயகன் தடுமாறி கீழ விழுகிறான், கதாநாயகி அவன் கையை பிடித்து தாங்குகிறாள். முதல் முறையாக கதாநாயகி அழகை பக்கத்தில் பார்க்கிறான். தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்த கதாநாயகன் தற்போது பக்கத்தில் பார்க்கும் அந்த தருணம். இந்த சூழலுக்கு ஒரு டியூன் கேட்டோம் . அதற்கு சிவா கொடுத்த டியூன் நல்லாயிருந்தது. பாடலுக்கு வரிகள் எழுத வைரமுத்து சாரை அழைத்தோம். அவர் டியூனை கேட்டுட்டு வரிகள் எழுதி முடித்தார். அவர் எப்போதுமே வரிகளை எழுதி முடித்தவுடன் இயக்குநருக்கு படித்து காண்பிப்பார். அப்போது என்னிடம் இந்த பாட்டு பெரிய வெற்றியடையும், எனக்கும் ஒரு வித்தியாசமான பாடலா இருந்தது என்று சொன்னார். இப்படி உருவான பாட்டு தான் 'என்ன அழகு எத்தனை அழகு'."
இதனை தொடர்ந்து 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' பாடல் உருவான விதம் பற்றி கூறினார். அவை பின்வருமாறு, "இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்'. இசையமைப்பாளர் சிவா இந்த டியூனை 2 வினாடி போட்டு காட்டினார். உடனே ஓகே ஆச்சு. 'ஹே கிருஷ்னாரே...என்று ஒரு ஸ்டார்ட் எடுத்து கொடுத்தார். நல்லாருக்கே, இதையே வைச்சிடலாம்ன்னு சொன்னேன். நான் வைரமுத்து சார்கிட்ட சூழலை சொன்னேன். நல்ல சூழல் என்று பாராட்டினார். நான் எப்போதும் பாடல் சூழலை சொல்லும் போது பழைய பாடல்களை சொல்லி இதுபோல் வேணும் என்று கேட்பேன்(அவர்களுக்கு உதவியாக இருக்குமென்று). அந்த வகையில் இந்த சூழலுக்கு நான் எடுத்துக்காட்டாக சொன்ன பாடல் வானம்பாடி படத்தில் இருந்து 'கடவுள் மனிதராக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்' பாடல். நல்ல வெற்றி பெற்ற பாடல். அந்த படத்தை இரண்டாவது முறை, மூன்றாவது முறை பார்க்க திரையரங்கிற்கு போவோம். இரவு மற்றும் மேட்னி காட்சிகள் தான் அதிகமாக பார்போம். அந்த பாடல் வரும் போது எழுப்பிவிடு என்று தூங்கிவிடுவோம்.
ஆனால் தற்போது பாட்டு வந்தால் திரையரங்கை விட்டு வெளியே போகிறார்கள். அந்த காலத்தில் ஒலியும் ஒளியும் கிடையாது. திரையரங்கில் மட்டும் தான் பாடலை கேட்க முடியும். பாடல் வரும்போது எழுப்பிவிடுவார்கள் எழுந்து பாடலை பார்த்துவிட்டு திரும்பி தூங்கிவிடுவோம். அப்படி இந்த 'கடவுள் மனிதராக பிறக்க வேண்டும்' என்ற பாடல் வரும்போது மக்கள் அனைவரும் கைதட்டினார்கள். 'அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்' என்று கடைசியாக முடித்திருப்பார். பெண்களுக்கு எதிராக பாட்டு அந்த காலத்திலிருந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த ஆணின் வலியை 'இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு' என்று முடித்திருப்பார். இது போன்ற வரிகள் வைரமுத்து சாரால் மட்டும் தான் எழுத முடியும். அதனை எடுத்துக்காட்டாக சொன்னோம். ஆனால் அவர் அந்த கதாபாத்திரமாய் மாரி காதலோடு எழுதி இருப்பார். காதல் இல்லாவிட்டால் வார்த்தைகள் இந்த அளவிற்கு வீரியமாய் வரமுடியாது" என்று கூறி இருந்தார்.