Skip to main content

இவரின் நடிப்பை கண்டு பிரமித்தேன் - சிவகுமார் 

Published on 19/02/2018 | Edited on 20/02/2018
sivakumar


மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்து, ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், இயக்குனர் பாலா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்...."பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு பேலன்ஸ் திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் கம்பேக்கை  வாழ்த்தி வரவேற்போம். ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ...? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா... ) ஒளிப்பதிவு பிரமாதம். முதல் ப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான். கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்... அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன் உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது. கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

"ரஜினிகாந்த் ஒரு பக்கா பாஜக ஆதரவாளர்" பிரபல ஆர்.ஜே அதிரடி!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

புதிய கல்விக்கொள்கை விவகாரம் தொடர்பான கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு பாஜக மற்றும் தமிழக அமைச்சர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அதிகம் பேசப்படாமல் இருந்த சூழ்நிலையில், சூர்யாவின்  பேச்சுக்கு பிறகு தமிழகம் முழுவதும் புதிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகிறது. அவரின் இந்த கருத்தை தமிழ் திரையுலகின் முக்கிய நபர்களும் ஆதரித்து உள்ளனர். குறிப்பாக கமல், அமீர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.

 

RJ Rajavel Nagarajan Interview



இந்நிலையில், 'காப்பான்' பட விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதுதொடர்பாக பேசிய அவர், சூர்யாவின் இந்த கருத்து பிரதமர் மோடிக்கு சென்றிருக்கும் என்று கூறினார். இதுதொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல ஆர்.ஜே ராஜவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் ' நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக சூர்யாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தார் என்பது தவறான புரிதல். அந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி பேசினார். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு ரஜினிகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்படி தான் இதை பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்தால் இந்த பிரச்சனை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அதனை செய்திருக்கலாம், அல்லது நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் கருத்தை ஆதரித்து அறிக்கை விட்டபோதாவது கூறியிருக்கலாம். இதையும் தாண்டி நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு சூர்யாவை ஆதரித்து ஒரு டுவிட் போடுவது சிரமமாக இருக்காது. ஆகையால் கபிலனின் கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார் என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

 

அதையும் தாண்டி அவர் எப்போதும் பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர் தான். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நேரில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக கூட்டணி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று கேட்டு தன்னுடைய பாஜக ஆதரவு நிலையை வெளிப்படையாக காட்டினார். எந்த ஒரு முக்கிய விவகாரத்திலும் பாஜகவை எதிர்த்து ரஜினி இதுவரை கருத்து தெரிவித்ததில்லை. ஆகையால், சூர்யாவுக்கு பதில் நீங்கள் பேசியிருந்தீர்கள் என்றால் அது மோடி வரை எதிரொலித்திருக்கும் என்ற கபிலன் வைரமுத்துவின் பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாகவே ரஜினியின் பேச்சை நாம் அணுக வேண்டுமே தவிர புதிய கல்விக்கொள்கையை அவர் எதிர்ப்பதாக இருந்தால் முன்பே இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருக்கலாம்" என்றார்.


 

Next Story

நான் ஏன் குள்ளமானேன் தெரியுமா..? சிவகுமார் சொன்ன உருக்கமான காரணம்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
sivakumar


நடிகர் சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39  ஆண்டுகளாக, ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த  மற்றும்  விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின்போது , சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் நடிகர் சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டுகான,  ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

 

 


அப்போது விழாவில் நடிகர் சிவகுமார் பேசியபோது...."இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள். நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. காற்றாலை வைத்து தயாரிக்கப்பட்டது எங்கள் கிராமத்தில் உணவாக இருந்தது. எங்க வீட்டில் கொஞ்சம் வசதில் என்பதால் அடிப்பிடிச்ச சோறு கிடைக்கும். மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும். அப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும். பவுனில் பாதிவிலை வருகிறதோ என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையிலேயே விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். செருப்பு என்றால் என்னவென்று தெரியாது. எவ்வளவு தூரம் என்றாலும் நடந்தே தான் போக வேண்டும். 

 

sivakumar

 

தீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வரும். அப்போது புதுசா துணியெல்லாம் போட மாட்டோம். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. எங்கம்மாவுடன் பிறந்தவர் தான் மாதம் 85 ரூபாய் அனுப்பி வைத்து சென்னையில் படிக்க வைத்தார். நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன் தெரியுமா...? நான் சென்னையிலிருந்த ரூமின் சைஸ் வெறும் 6 அடிக்கு 5 அடி மட்டுமே. அதுலயே முடங்கி இருந்ததால் இப்படி குள்ளமாக ஆகி விட்டேன். இதை நான் சிரிப்பதற்காக சொல்லவில்லை.. 7 வருடம் அதில் தான் இருந்தேன்.

 

 


நாங்கள் இருந்த ஏரியாவில் நிறைய குடும்பங்கள் இருக்கும். ஆகையால் மாலை 6 மணிக்கு மேல் பாத்ரூம்மே போகக்கூடாது. காலையில் பெண்கள் எல்லாம் குளித்து முடித்தவுடன் தான் பாத்ரூம் போகணும், ஆணி அடிக்கக் கூடாது, தம் அடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களோடு தான் என்னைச் சேர்த்தார்கள். நாங்கள் 22 பேர் பேச்சுலராக இருந்தோம். அந்த 22 பேருக்கு 2 டாய்லெட், 2 பாத்ரூம் தான் இருக்கும். காலை 4:30 மணிக்கு எழுந்து டாய்லெட் போக ஆரம்பித்தேன். அப்போது சுத்தமாக இருக்குமே என்ற காரணத்தினால் தான். அப்போது தான் 5 மணிக்கெல்லாம் யோகா செய்யத் தொடங்கினேன். 1 ரூபாய் கொடுத்து யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கித் தான், யோகாவே கற்றுக் கொண்டேன். அசைவ சாப்பாட்டை விட்டு 30 வருஷமாகிவிட்டது. ஒரு மாதத்துக்கு திரைப்படம் பார்க்க 3 ரூபாய் பட்ஜெட். இங்கிருந்து மகாபலிபுரத்துக்கு சைக்கிளிலே சென்றுவிட்டு வருவேன். 

 

sivakumar

 

இப்போது என் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஒரு வேலை சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாயாகிறது. சண்டிகரிலிருந்து கன்னியாகுமரி வரை படிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆனது. அதற்கே 7450 ரூபாய் தான் ஆனது. அப்போ எவ்வளவு சிக்கனமாக இருந்திருக்கிறேன் என்று நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் ஏன் சொல்லிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன் தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறைவோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. அப்படியென்றால் எவ்வளவு தைரியத்தில் இருந்திருக்கிறேன் பாருங்கள்.

 

 


இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா - அம்மா என்ன செய்றாங்க போன்ற எதையுமே கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.இந்த மூஞ்சு எவ்வளவு கோரமானது என்று எனக்குத் தெரியும். 100 படங்களைத் தாண்டி நடிச்சுருக்கேன். அதைப் பார்த்த தமிழக மக்கள் கடவுள் இல்லயா. அந்த மக்களுக்கு நம்ம ஏதாவது பண்ணனும் இல்ல. ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும் போது, அது பலருக்குமே உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளைத் தொடங்கினேன். என் பசங்க இந்தத் துறைக்கு வருவாங்க, அகரம் பவுண்ட்டேஷன் தொடங்குவாங்க என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. நீ ஒன்றை நேர்மையாக சத்தியமாக செய்தாய்... அது பல மடங்கு பெருகும் என்பதற்கு உதாரணம். இன்னும் பணத்தை அதிகரிக்கலாம் என்று சூர்யா கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சூர்யாவுக்குப் பிறகு அவரது குழந்தைகள் ஏற்று நடத்தணும். அதற்காக மட்டுமே 5 லட்சம் போதும் என்று சொன்னேன். உடம்பைப் பேணுங்கள். வாழ்வாங்கு வாழுங்கள்" என்றார்.