
'காற்று வெளியிடை' படத்தை அடுத்து இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் 'செக்க சிவந்த வானம்'. தொழிற்சாலையில் ஏற்படும் மாசு மற்றும் கழிவு, அதனால் ஏற்படும் பிரச்சனை பற்றி அலசும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடிக்கின்றனர் என்பதை பற்றிய தகவல்கள் கசிந்து வருகிறது. அதன் படி விஜய் சேதுபதி போலீசாகவும், சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும், அருண்விஜய் ஒரு கோபக்கார இளைஞராகவும் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த நால்வரும் சகோதரர்களாக நடிப்பதாகவும் ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.