யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் மே 12 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அதில் நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது, "சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்டபோது அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டு வந்துள்ளார்" என்றார்.
இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா பேசியதாவது, "இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன். குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது" என்றார்.