ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1952 ஆம் ஆண்டு விஜய தசமி நாளில், தனது இயக்கத்தை தொடங்கிய நிலையில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு விஜயதசமி நாளான இன்று (24.10.2023) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடந்தது. இந்த உத்சவ் நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராகப் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், "நான் என்ன சொல்ல முடியும். உங்களுக்கு சல்யூட் மட்டுமே அடிக்க முடியும். அகண்ட பாரதம் என்ற நமது சித்தாந்தம், மரபுகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு மற்றவர்களை விட மிக அதிகம். எங்கள் கலாச்சாரத்தை இசை மற்றும் பாடல்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு கற்பிப்பதும் கடத்துவதும் எனது கடமை என்று நான் நம்புகிறேன்.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடனான எனது உரையாடல்களிலும், எனது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படப் பாடல்களிலும் இதைச் செய்ய முயற்சிக்கிறேன். இந்த விழாவில் நான் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஒட்டுமொத்த சங்க பரிவாரங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.