Skip to main content

எல். முருகனை பாராட்டிய சீனு ராமசாமி

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

seenuramasamy praised l murugan

 

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (16.05.2023) தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ளன. 

 

இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்தியாவின் பிரதிநிதியாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். 

 

சிவப்பு கம்பள வரவேற்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார். இதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, "உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் எல்.முருகன் கலந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எல்.முருகனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக சீனு ராமசாமியின் 'மாமனிதன்' படத்தை பார்த்து, மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் என எல்.முருகன் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்