சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. அந்த வகையில், புகழ்பெற்ற ரஷ்யாவின் மாஸ்கோ திரைப்பட விழாவில் மாமனிதன் படம் திரையிடத் தேர்வாகியுள்ளது. நாளை (20.04.2023) முதல் 27ஆம் தேதி (27.04.2023) வரை இந்த நிகழ்ச்சி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன், ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது படம் குறித்து நிறைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார் சீனு ராமசாமி. இதனிடையே விஜய் சேதுபதி குறித்து பேசிய அவர், "விஜய் சேதுபதி ஒரு உலக நடிகன். அவருக்கு இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால், வாழ்வை பற்றிய தெளிவு இருந்தால் அவர் போக வேண்டிய இடமே வேறு. இப்போது இந்தி வரையும் சென்றிருக்கிறார். அடுத்ததாக ரஷியன், அமெரிக்கன், ஆஸ்திரேலியன் படத்தில் நடிக்கலாம். ஏனென்றால் மாமனிதன் படம் 650 முறை உலக நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.
65 நாடுகளில் உள்ள நடுவர்கள் அனைவருமே க்ரியேட்டர்ஸ். ரஷ்யாவில் படம் திரையிடுகிறோமென்றால், அது முடித்த பின்பு ஒரு ரஷ்ய இயக்குநர் என்னை சந்தித்து பேசுவார். இதேதான் எல்லா உலக நாடுகளிலும். தமிழர்களுடைய பெருமை விஜய் சேதுபதி மூலமாக உலகம் முழுவதும் தெரியணும். நமது கலாச்சாரம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம். அதற்காகத்தான் இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். 12 வருடங்களில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என நான்கு படம் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியுள்ளேன். இதில் இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த 4 படங்கள், நான் இறந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய படங்களாக இருக்கும். விஜய் சேதுபதி பெயரை, பெருமையை பேசக்கூடிய படமாக இருக்கும். மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைவது நடக்காது. ஏனென்றால் எனக்கு இன்னும் 4 படங்கள் இருக்கிறது. அவரை சந்திக்க வேண்டுமென்றால் இன்னும் 5 வருடம் கழித்து தான் சந்திக்க முடியும். அந்த 5 வருடத்தில் எனக்கு 55 வயதாகிடும்" என்றார்.