மாமனிதன் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ‘குட்டி புலி’ தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சீனு ராமசாமியை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம்.
அப்போது கோழிப்பண்ணை செல்லதுரை படம் குறித்து பல்வேறு விஷயங்கலை பகிர்ந்த அவர், நடிகர்கள் தேர்வு குறித்து பேசினார். அவர் பேசுகையில், “நம்ம ஊரில் நிற அரசியல் கிடையாது. சினிமாவில் ஒரு பொதுவான கருத்தோட்டம் இருக்கிறது. பார்க்க தகுந்த முகங்கள். பார்க்க தகுதியற்ற முகங்கள். அப்போ, இப்படி இருந்தால்தான் சினிமாவிற்குள் வரமுடியும் என்கிற கண்ணுக்கு தெரியாத எழுதப்படாத விதி நடிகர்கள் தேர்வு செய்வதில் இருக்கிறது. அதை எப்போதே உடைத்துவிட்டார்கள். பாலுமகேந்திரா நிறமெல்லாம் தேவையில்லை திறமை தான் வேண்டும் என படம் எடுத்திருக்கிறார். தர்மதுரை படத்தில் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘அழகு என்பது உருவத்திலோ நிறத்திலோ கிடையாது. செய்கிற செயலில்தான் இருக்கிறது’. அதனால் ஒரு மனிதன் அவனின் செயலை வைத்து தான் மற்றவர்களுக்கு நன் மதிப்பு உண்டாகும். ஒரு மனிதன் வசீகரமான தோற்றத்தில் இருந்து கொண்டு நிறைய கெட்ட காரியங்கள் செய்தால் அவரை நாம் விரும்பமாட்டோம்.
எனவே நடிகர்கள் என்றால் அவர்களுக்கு நன்றாக நடிக்க தெரிந்தால் போதும். அப்படி இந்த கோழிப்பணை செல்லதுறையில் நடிப்பை பற்றி ஒரு புரிதல் இருக்கிற இளைஞர்கள், இளம் பெண்கள் வந்தார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். படத்தின் கதாநாயகன் இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் மகன். தயாரிப்பாளர் என்னை கேட்டும்போது கண்டிப்பாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டேன். என்னுடைய கதைக்கு நடிக்கக்கூடிய பக்குவம் உங்க மகனுக்கு இருந்தால் நிச்சயம் பண்ணுவேன். ஏனென்றால், என்னுடைய கையில் இருக்கிற் ஒரே ஆயுதம் அதுதான். அதையும் நான் உடைக்க விரும்பவில்லை. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லம் கிராமத்து மனிதர்கள் கிடையாது. எல்லாருமே தொழில் முறை நடிகர்கள். அவர்களை கதை மாந்தர்களாக மாற்றியிருக்கிறேன். அதே போல் அவர்களுடைய முகங்கள் அந்த ஊரோடு சேர்ந்திருந்தட்தால் எனக்கு எளிமையாக அமைந்துவிட்டது” என்றார்.