சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, நடித்துள்ள ஜெயிலர் படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.600 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினி, பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், சந்திப்பு மேற்கொண்ட ரஜினி அவரைப் பார்த்ததும் காலில் விழுந்த ஆசிபெற்றார். இது சர்ச்சையான நிலையில் இதற்கு விளக்கமளித்த அவர், ''ஒரு சன்னியாசி ஆகட்டும், ஒரு யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்றார்.
இருப்பினும் இது பேசுபொருளாக இருந்த வேளையில் ரஜினியின் இந்த செயல் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அவருக்கு விருப்பம் என்னவோ அதை செய்திருக்கிறார். அதை செய்யவிடுங்கள். சுதந்திரமாக அவரை இருக்க விடுங்கள். காலில் விழுந்ததினால் ஒரு மனிதன் சமூக குற்றவாளியாகிவிடுவானா. ஒருவன் அவனைவிட சின்ன வயதாக இருந்தாலும் அவன் அறிவாளியாக இருக்கும் பட்சத்தில் அவன் காலில் விழுந்தால் அது ஏற்புடையது தான்" என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோவை ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, "அண்ணன் சீமானின் இந்த பேட்டியை இப்போதுதான் பார்த்தேன். அண்ணன் சீமானுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தலைவருக்கு (ரஜினி) எதிராகப் பேசியபோது நானும் உங்களை எதிர்த்துப் பேசியிருக்கிறேன் ஆனால் இப்போது நீங்கள் அன்புடன் பேசும்போது. அதே அன்புடன் உங்களை விரைவில் வந்து பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரஜினியின் அரசியல் வருகை குறித்த விவாதத்தில் சீமானுக்கும், ராகவா லாரன்சுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.