விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யுடன் இணைந்து பயணிப்பதை குறித்துப் பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். செய்தியாளர்கள் சந்திப்பில், களத்தில் இறங்கி போராடுவதற்கு விஜய்யை அழைப்பீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதை என் தம்பி விரும்பணும். பேர் அறிவிச்சிருக்காரு. அதுக்கு இவ்ளோ பேசுறீங்க. இந்த கேள்வியை எல்லாரும் என்கிட்டயே கேக்குறீங்க. நாங்க ரெண்டு பேரும் அண்ணனும் தம்பியுமா இருப்பது பிரச்சனைன்னா... நாங்க ஒன்னும் செய்ய முடியாது. அவர் கட்சி ஆரம்பிச்சு, கோட்பாட்டை சொல்லி, லட்சியத்தை சொல்லும் போது, ரெண்டு பேருக்கும் உடன்பட்ட கொள்கை, கோட்பாடாக இருந்தால், அதை என் தம்பி தான் முடிவு பண்ண வேண்டும். அவர் தனிச்சு நிக்க வேண்டும் என முடிவெடுத்தார்னா அதில் நான் தலையிட முடியாது. இல்லை அண்ணனுடன் துணை நிற்பேன் என்று அவரும் முடிவெடுத்தால் நீங்களும் தலையிட முடியாது. அதனால் அதை இப்போ பேசக் கூடாது” என்றார்.