எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா இணைந்து தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ‘திலகர்’ துருவா நாயகனாக நடிக்க, நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். மேலும் மனோபாலா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்தும், படம் குறித்தும் சரண்யா பொன்வண்ணன் பேசியபோது....
"ஒரு படத்துல நடிக்க அழைப்பு வரும்போது, அந்தப்படத்தின் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எல்லோருமே கிட்டத்தட்ட புதுமுகங்களா இருந்தாங்கன்னா, நான் முக்கியமா படத்தையோட கதையை கேட்பேன். அதற்கப்புறமா அதுல என்னோட கதாபாத்திரத்தையும் கேட்டுட்டுத்தான் ஒத்துக்குவேன். சில கதைகளை, 'சரி.. பண்ணுவோமே' என்கிற அளவு ஈடுபாட்டுடன் தான் நடிப்போம். ஆனால் சில கதைகள் இதில் நாம நடிச்சே ஆகணும்னு சொல்ற அளவுக்கு சூப்பரா இருக்கும். அப்படி ஒரு படம் தான் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'. இந்தப்படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டு பெண்ணாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குனர் ராகேஷ. படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட்டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன். தொடர்ந்து அம்மா கேரக்டராகவே பண்றீங்களேன்னு பலரும் கேட்கத்தான் செய்றாங்க. ஆனாலும் கடவுளின் அருளாலும், இயக்குனர்களின் புதிய கற்பனைகளாலும் எனக்கு படத்துக்குப்படம் வித்தியாசமான அம்மா கேரக்டர்களாக கிடைத்து வருகின்றன. இந்தப்படம் பார்ப்பதற்கு சின்னப்படமா தெரிஞ்சாலும், படம் பார்க்கிறப்ப உங்களை அப்படி, இப்படினு நகரவிடாம கட்டிப்போட்டுரும்" என்றார்.