கர்நாடகாவில் 2019ஆம் ஆண்டிற்கான மாநில அரசு திரைப்பட விருதுகள் கொரனாவால் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது பயில்வான் படத்துக்காக கிச்சா சுதீப்பிற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கிச்சா சுதீப் அந்த விருதை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு அதற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். இந்த கௌரவத்திற்காக நடுவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பல ஆண்டுகளாக விருதுகள் பெறுவதை தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுத்திவிட்டேன். இங்கு திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் இந்த விருதை பெற்றால் எனக்கு மகிழ்ச்சி தான். விருதுகளை எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விப்பேன். எனது இந்த முடிவு நடுவர்களையும் அரசையும் எதாவது ஒரு வகையில் பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றுள்ளார்.