உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை புகழ்பெற்ற பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டீக்கின்ஸ் உள்ளிட்ட 10 பேர் வாங்கியுள்ள நிலையில், இவ்விருதினைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெறவுள்ளார்.
1986 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறை மூலம் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி எனப் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து தமிழில் அதிக படம் பணியாற்றியுள்ளார். இதுவரையில் 12 தேசிய விருது வாங்கிய அவர், இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.