பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணி, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணியை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர், படத்தைக் குறித்தும் தன் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நேர்காணலில் சங்கமித்ரா செளமியா அன்புமணியிடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு திரைப்படங்கள் எவ்வளவு நெருக்கமானது என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் பதிலளிக்கையில், “அவருக்குப் படம் பார்ப்பது ரொம்ப பிடிக்கும். நேரம் இருக்கும்போது வெளியில் எங்கேயும் போகமாட்டார். எங்களுடன் சேர்ந்து ரிலாக்ஸ் செய்வதற்கு பெரும்பாலும் படம் அல்லது டிவி பார்ப்பார். திரைப்படங்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். படங்களைப் பார்த்துவிட்டு அவர் கொடுக்கும் விமர்சனமும் கரெக்ட்டாக இருக்கும்.
அலங்கு படத்தை அவர் பார்த்துவிட்டு, எனக்கு மிகவும் பிடித்த விமர்சனத்தைச் சொன்னார். அது என்னவெனில் முதலில் அவர் படக்குழுவை வாழ்த்திவிட்டு இயக்குநரை அழைத்து கை கொடுத்தார். அதன் பின்பு படம் பார்த்தது காட்டுக்குள் இருந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது என்று சொன்னார். அந்தளவிற்கு படத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டீர்கள் என்று பாராட்டினார். படத்தில் நிறைய சின்ன விஷயங்களைக் கவனித்து சொல்லுவார்” என்றார்.