பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா செளமியா அன்புமணி, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணியை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர், படத்தைக் குறித்தும் தன் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம், செளமியா அன்புமணியுடன் சேர்ந்து மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சங்கமித்ரா செளமியா அன்புமணி பதிலளிக்கையில், “நான் உண்மையிலேயே ரியாலிட்டியில் இல்லை என்பது தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களைச் சென்று சந்தித்தபோதுதான் தெரிந்தது. கஷ்டம் என்றால் ஓரளவு தெரியும். ஆனால் மக்களைச் சந்தித்தபோது அடிப்படைத் தேவைகளைக் கேட்டார்கள். என் வாழ்க்கையில் அவர்கள் சொல்வதை ஒரு விஷயமாகக் கூட நான் நினைத்ததில்லை, அப்படி வளரவும் இல்லை. என்னுடைய தாத்தாவும் அப்பாவும் அவர்களைப்போல் இருந்திருக்கலாம். தான் பட்ட கஷ்டத்தைப் பிள்ளைகளும் அனுபவிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் நினைத்ததால், நான் கஷ்டப்படவில்லை. ஆனால் மக்களைச் சந்தித்த பிறகு, நான் என் அம்மாவிடம், வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றேன்.
மக்கள் சொன்ன குறைகளை எழுதி வைத்துள்ளேன். ஒரு கிராமத்தில் சிறுமி என்னிடம் வந்து நூலகம் வேண்டுமெனக் கேட்டார். அதன் பிறகு சின்னதாக ஒரு நூலகம் கட்டிக் கொடுத்தோம். இது போன்ற என்னால் தீர்வு காண முடிந்த பிரச்சனைகளுக்கு உதவினேன். ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், மக்கள் சொன்ன பிரச்சனைகளுக்கு உதவி செய்திருக்க முடியும். அந்த தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற மனநிலை வந்தது” என்றார்.
இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.-வுடன் பா.ம.க. கூட்டணி வைத்து 10 இடங்களில் போட்டியிட்டது. அதில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டு, 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.