Skip to main content

"சட்டம் பேசியதால் ரோட்டில் வைத்து என்னை அடித்த போக்குவரத்து காவலர்" - இயக்குநர் எஸ்.ஏ.சி. பேச்சு!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

S. A. Chandrasekhar

 

தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தை சலீம் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (15.12.2021) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர், நீதிபதி சந்துரு, இயக்குநர் எஸ்.ஏ.சி. உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

   

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி., ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தை இயக்கிய காரணம் குறித்துப் பேசுகையில், "1980களிலேயே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றொரு படம் எடுத்தேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான். உதவி இயக்குநராக இருந்தபோது என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளில் வள்ளுவர் கோட்டம் வழியாக வந்துகொண்டிருந்தேன். அப்போது சிக்னல் கிடையாது. போக்குவரத்துக் காவலர் ஒருவர் நின்றுகொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். நான் வரும்போது ஸ்டாப் என்று எழுதப்பட்டிருந்த போர்டைக் காட்டி வாகனங்களை நிறுத்தத் சொன்னார். நான் அதைக் கவனிக்காமல் சென்று அந்த போர்டை இடித்து வண்டியை நிறுத்தினேன். உடனே அவர் கெட்டவார்த்தையில் திட்டி, ‘நான் நிறுத்த சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ போய்கிட்டே இருக்க...’ என்றார். ‘தெரியாமல் வந்துவிட்டேன் சார்’ என்று நான் கூறியும் தொடர்ந்து என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் என்னை திட்டிக்கொண்டிருக்கையில், ஒரு கார் எங்களை வேகமாக கடந்து சென்றது. நான் உடனே, ‘என்னைப் பிடிச்சீங்களே... அந்தக் கார்காரனை ஏன் பிடிக்கவில்லை’ என்றேன். அதற்கு அவர், ‘அவன் பின்னால் என்ன ஓடச் சொல்றியாடா’ என்றார். ‘கார் வைத்திருந்தால் அவனுக்கு சட்டம் வளையும். என்ன மாதிரி ஏழை பசங்க சைக்கிள்ல வந்தா பிடிச்சுக்குவிங்க... அப்படித்தான’ என்று கூற, ஓங்கி அடித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை எடுக்க என்னைத் தூண்டியது" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்