எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு, படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், "‘நான் கடவுள் இல்லை’ படத்தை டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளோம். அதற்கு முன்பாக படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை முடிக்க வேண்டும். படத்தின் ஹீரோ சமுத்திரக்கனி தமிழ்நாட்டில் இல்லை. அவருக்கு ஃபோன் செய்தபோது, ‘நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்’ என்றார். ‘எப்போது சென்னை வருவீர்கள்’ என்றேன். ‘நான் இங்கு செட்டிலாகிவிட்டேன் சார். நிறைய பெரிய படங்கள் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் வருகிறேன்... என்ன விஷயம் சார்’ என்றார். அவரிடம் இசை வெளியீட்டு விழா பற்றி கூறினேன். மூன்று நாட்களுக்கு முன்னால் ஃபோன் செய்து அடுத்த இரண்டு நாட்களில் என்றாவது இசை வெளியீட்டு விழா வைக்கமுடியுமா என்றார். உடனடியாக விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். விழாவிற்கு யாரை அழைக்கலாம் என்று நினைத்தபோது சமூக அக்கறையுடன் படம் எடுக்கும் இயக்குநர் அமீரை அழைக்கலாம் என்று தோன்றியது. அவரிடம் கேட்டபோது அவரும் சரி வருகிறேன் என்றார்.
சமீபகாலங்களில் பார்க்காத சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் பார்க்கலாம். அவருக்குள் ஒரு கமர்ஷியல் ஹீரோ ஒளிந்துகொண்டிருக்கிறார். சினிமா என்பது மீடியா மட்டுமல்ல, அது மிகப்பெரிய ஆயுதம். அதை மக்களுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சினிமாவிற்கு வந்தேன். அதை முடிந்த அளவிற்கு செய்துகொண்டிருக்கிறேன். ‘இந்தப் படத்தை ஓடிடியில் கொடுத்துவிடுங்கள் சார்... நல்ல தொகை கிடைக்கும்’ என்று சமுத்திரக்கனி கூறினார். திரையரங்கில் வெகுஜனங்கள் படம் பார்த்து கைதட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை எந்தப் பணமும் ஈடுசெய்ய முடியாது. அதனால் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘கலங்காதே திகையாதே நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் பைபிளிலிருந்து சொல்வதால் இவர் மதத்தைப் பரப்புகிறார் என்று எங்கிருந்தோ ஒருத்தன் கேஸ் போடுவான். இது பைபிளில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் உள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் மத்தியில் பேசுகையில், கஷ்டப்பட்டு படித்தால்தான் பாஸ் செய்ய முடியும். திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் பாஸ் செய்ய முடியாது எனக் கூறிவிட்டேன். மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைச் சொன்னேன். ஆனால், நான் கிறிஸ்தவன் என்பதால் திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்துவிட்டேன் என ஒருவர் வழக்கு தொடுத்தார். அதனால் மேடையில் பேசுவதற்கே பயமாக உள்ளது. அதே நேரத்தில் பயந்தால் வாழ முடியாது. முதல் படத்திலிருந்தே போராடி வாழ்ந்து பழகிவிட்டோம்" என்றார்.