தமிழ் சினிமாவின் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவின் தந்தை பிரபல படத்தொகுப்பாளர் மோகன். அவர் எழுதிய வேலியற்ற வேதம் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி எழுதிய தனி மனிதன் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தந்தையும், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்துகொண்டு பேசுகையில், “இது என் குடும்ப விழா என்பதால் வந்துள்ளேன். புத்தகத்தின் அட்டைப் படத்தில், பல சாதனைகளைச் செய்துவிட்டு உட்கார்ந்திருப்பது போல், கெத்தாக உட்கார்ந்திருக்கிறார் எடிட்டர் மோகன். அதேபோல், புத்தகத்தின் கடைசியில் இருக்கும் குடும்பப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, அப்படியொரு குடும்பத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது எனத் தோன்றியது” என்றார்.
மேலும் அவரது வாழ்விலும் எடிட்டர் மோகன் வாழ்விலும் நடந்த சில சுவாரஸ்யமான ஒற்றுமைகள் குறித்து பேசினார். அதில், “எடிட்டர் மோகன் தமிழில் ஹிட்டடித்த ஒரு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என திட்டமிட்டார். அந்த சமயத்தில், அவரது மூத்த மகன் ராஜா, ‘அப்பா நான் இயக்குனராக வேண்டும்’ என்றார். உடனே பையனை இயக்குனராக்கினார். அதேபோலதான் என்னுடைய மகன் விஜய்யை கஷ்டப்பட்டு லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்த்தேன். ஆனால், ஒருவருடம் மட்டுமே கல்லூரிக்கு சென்றுவிட்டு, அடுத்த வருடமே நான் நடிகராக வேண்டும் என்று சொன்னார். நான் என் மகனை நடிகனாக்கினேன், அவர் அவருடைய மகனை இயக்குநராக்கினார்.
அதேபோல், இஸ்லாம் முறைப்படி எடிட்டர் மோகனுக்கு 2வது திருமணம் நடைபெற்றது. எனக்கு, கிறிஸ்தவ முறைப்படி 2வது திருமணம் நடைபெற்றது. 6 வயதில் தன் அப்பாவின் திருமணத்தைப் பார்த்தது என் மகனாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.