ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ரன்'. இப்படத்தை 'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது இப்படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் வாங்கியிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்பணம் ரூ.10 கோடி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ரெவன்சா நிறுவனம் சார்பில் ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், டப்பிங் உரிமை குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப் போவதில்லை என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று 'ருத்ரன்' படம் திரையரங்கம், ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி 'ருத்ரன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.