இந்திய திரையுலகில் ஆஸ்கர் வென்று ஒரு புதிய சாதனை படைத்துள்ளது ஆர்.ஆர்.ஆர் படம். அதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சில கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான 'ஆஸ்கர்' விருது மொத்தம் 23 - 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து பிரிவுகளிலும் ஆங்கில மொழி படத்துக்கே கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு பிரிவின் கீழ் 'சிறந்த சர்வதேச படம்' என்ற பிரிவில் மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் போட்டியிட உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் அவர்களது நாட்டின் சிறந்த படங்களில் ஒன்றை தேர்வு செய்து ஆஸ்கர் விழாவிற்கு அனுப்புகிறது.
இந்தியா சார்பில் ஆண்டுதோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புகிறது ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (The Film Federation of India). அந்த வகையில் இந்தாண்டு 'ஆர்.ஆர்.ஆர்' படம் நிச்சயம் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சர்ப்ரைஸாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பியது. இதற்காக பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்தது. மேலும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது உள்ளிட்ட சில சர்வதேச விருதுகளை தட்டிச் சென்றது. குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது வாங்கியது பரவலாக பேசப்பட்டது. அப்போது இப்படம் குறித்து பிரபல ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோர் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
இப்படி சர்வதேச அரங்கில் பலரது கவனத்தை ஈர்த்து இந்திய ரசிகர்களை பிரமிக்க வைத்தது ஆர்.ஆர்.ஆர் படமும் அதன் படக்குழுவும். இந்த சூழலில் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிசெய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியானது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றது. ஆனால் இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட 'செல்லோ ஷோ' படம் இடம்பெறவில்லை. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட படங்களில் இதுவரை மதர் இந்தியா (இந்துஸ்தானி), சலாம் பாம்பே (இந்தி), லகான் (இந்தி) உள்ளிட்ட படங்கள் மட்டுமே தேர்வானது. முதல் முறையாக தென்னிந்திய மொழி படமான ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு) நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஒரு அதிர்ச்சியாக ஆஸ்கர் விருது வென்று அதிர்ச்சியூட்டியது. முதல் முறையாக ஒரு இந்திய படம் ஆஸ்கர் கனவை நினைவாக்கியுள்ளது என சிலாகித்து பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட படம் எப்படி விருது பெற்றது என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மேக்கப் கலைஞர் "இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் விருதை காசு கொடுத்து வாங்குவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் தற்போது ஆஸ்கரிலுமா. பணம் இருந்தால் எதையும் வாங்கி விட முடியும்" என ஒரு பதிவு செய்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுக்கிறது.