உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4-ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா தொற்று காரணமாகத் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி திரை பிரபலங்களிடம் நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி 50 லட்சம், சூர்யா&கார்த்தி 10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி தலா 10 லட்சம், தனுஷ் 15 லட்சம் எனப் பல்வேறு திரை பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.இந்த வரிசையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ.20 லட்சம் பெப்சிக்கு நிதியுதவி அளித்தார். நடிகை நயன்தாராவின் இந்த உதவிக்கு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
''மனிதநேயம் கொண்ட கருணைமிகு எங்கள் திரைப்படச் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்ப்பதற்காக வேலை முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வேண்டுகோளை ஏற்று நன்கொடை வழங்கிய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று திரைப்படத் தொழிலாளர்கள் மேல் பரிவும், பாசமும் கொண்டு வேலை முடக்கத்தால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்ற திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு நடிகை நயன்தாரா அவர்கள் ரூபாய் 20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நயன்தாரா அவர்களுக்குத் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.