இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓரிரு தினம் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. மேலும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தார்கள். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறினார்கள். பின்பு கண்ணீருடனும் வேதனையுடனும் கங்கைக் கரைக்கு வந்தார்கள். ஆனால் அவர்களை உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பிறகு பிரிஜ் பூஷண் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு விதித்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே பரபரப்பாக்கியுள்ள நிலையில் பலரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிஷோர் "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து அமைதியாக அமர்ந்திருக்கிறது இந்த பிரதமரின் ஒற்றை அரசு" எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இந்திய மல்யுத்த வீரர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
அவர்கள் இப்போது எப்படி உணர்கிறார்கள் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த உலகத்தின் முன் அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியம் மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்பட்டுள்ளார்கள். நமது நாட்டையும், நமது மதிப்புகளையும் வெளிநாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் இவ்வளவு பெரிய முயற்சி எடுக்கிறார்கள் என்றால் அதை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்குப் பின்னால் இருப்பதைப் போல நாமும் அவர்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். இதுபோன்ற குரல்கள் தடுக்கப்பட்டால் தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துவிடும். மேலும் நாம் ஒன்றாக இணைவதற்கு தடையாக இருக்கும். இது விரைவில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். இது நெஞ்சை பதற வைக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் ' இறுதிச்சுற்று' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து பிரபலமானார். அவர் முன்னாள் கிக்பாக்சிங் மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WrestlerProtests #IStandWithMyChampions #SakshiMalik @SakshiMalik @Phogat_Vinesh @BajrangPunia pic.twitter.com/UxrV2C3JLo— Ritika Singh (@ritika_offl) May 30, 2023