கொரோனா ஊரடங்கு காலங்களுக்குப் பிறகு 2022-ஆம் ஆண்டு புத்துணர்ச்சியாகத்தான் தொடங்கியது. ஆனாலும் ஜனவரி மாதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிறு ஊரடங்கு என்று கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ஒருவழியாக தன்னை தக்க வைத்துக் கொண்டு அடுத்தடுத்த மாதங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
திரையரங்கைப் பொறுத்தவரை மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். அரங்கம் நிறைந்த காட்சிகள் வந்ததாக எல்லாம் தரவுகள் சொன்னார்கள்தான். அந்த வகையில் கவனிக்க வைத்த படம், கதற விட்ட படம், கல்லா கட்டிய படம் என்று மூன்று வகையில் மூன்று மூன்று படங்களை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..
கவனிக்க வைத்த படம்:
டாணாக்காரன்
பெரிய பில்டப்புகள் எதுவும் இல்லாமல் ஓடிடி தளத்தில் உருவாகி, பெரிய அளவில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டதில் 2022-ல் இயக்குநர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் முக்கிய இடம் வகிக்கிறது.
போலீஸ் அகாடமியில் காவலர் பயிற்சிக்கு நுழைபவர்களின் சிக்கலை படம் பிடித்துக் காட்டியது. திரைக்கதையும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருந்தது. வேறொரு பரிணாமத்தில் விக்ரம் பிரபு இப்படத்தில் நடித்திருந்தார்.
கார்கி
சிறுவர்களின் மீதான பாலியல் தொல்லைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்மங்கள் வக்கிரங்கள் பற்றிய பிரச்சனையை அணுகிய விதத்தில் இப்படம் பேசு பொருளானது. சாய் பல்லவி இக்கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் மிகவும் பொறுப்பான நாயகியாக மிளிர்கிறார்
இந்தப் பட்த்தின் கிளைமேக்ஸ்தான் எதிர்பார்ப்பாகவே கதையை மையமிட்டு நகர்த்தி சுவாரசியமாகவும் சமூகப் பிரச்சனையை சொல்லி கவனிக்க வைத்தது
விட்னஸ்
இந்திய சூழலில் மலக்குழி மரணங்கள் இன்னும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எது எதுக்கோ மிசின் கண்டுபிடிக்கிறார்கள் இதற்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா? கண்டுபிடித்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லையா என்பதெல்லாம் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில், மலக்குழி மரணம் பற்றிய பிரச்சனையை கதைக் களமாக எடுத்து அதை அரசியல் சட்டத்தின் கீழ் தீர்வுக்குள் கொண்டு வர முயலும் பொது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைகிறது இப்படம். ரோகிணியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டத்தக்கது.
கதற விட்ட படம்
இந்த படமெல்லாம் தியேட்டருக்கு வந்ததும் தெரியல போனதும் தெரியல என்கிற ரீதியில் மூன்று பெரிய நாயகர்கள் நடித்த படங்கள். எப்புட்ரா இதையெல்லாம் படமாக எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல வைத்த படங்கள் இவை.
கேப்டன்
ஆர்யா என்னும் நல்ல உடல்வாகு உள்ள நாயகன் குத்துச் சண்டையை மனிதர்களோடு போட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஏலியன்ஸோடு போட்டால் எப்படி ஏற்றுக்கொள்வது இதே கேள்விதான் எல்லா ரசிகர்களையும் யோசிக்க வைத்திருக்கும்.
அர்னால்டு ஏலியன்ஸோடு போட்ட சண்டையை பட்டி டிங்கரிங் செய்து இங்கே ஆர்யாவை நடிக்க வைத்தால் பார்க்க முடியல, திரைக்கதையிலும் பெரிய சுவாரசியமற்றுப் போயிருந்தது.
DSP
போலீஸ் படமாக ஏற்கனவே விஜய் சேதுபதியை பார்த்தாச்சு. அதில் வெற்றியும் கண்டார் என்றே சொல்லலாம்தான். ஆனால், இந்த போலீஸ் பல சமயம் பில்டப் போலீஸாகவே வந்து போகிறார். எதுக்குடா இந்தப் படம் என்று கேட்டு முடிப்பதற்குள் சக்சஸ் மீட் என்று நம்மை நம்ப வைத்து திரையரங்கம் வர வைக்கப் பாத்தார்கள்., யாரும் சிக்கல.
பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் டான் என்னும் வெற்றி படம் தந்திருந்தார் என்று தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது. எப்படியோ சுவாரசியமாக பார்க்க வைத்துவிட்டார்கள். ஆனால் அடுத்து பிரின்ஸ் வெளியிட்டார். பிரின்ஸ் மகுடம் சூடாமலேயே போய்விட்டார்.
கல்லா கட்டிய படம்
இந்தப் படங்களைப் பற்றிய சிறு குறிப்பு குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் வெற்றி பெற்று வசூலும் செய்திருக்கிறது. பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்பட்டும் இருக்கிறது. அந்த வகையில் டாப் 10 வசூல் படங்கள்
1.பொன்னியின் செல்வன்
2.விக்ரம்
3.வலிமை
4.கேஜிஎப் (தமிழ்)
5.பீஸ்ட்
6.டான்
7.RRR (தமிழ்)
8.திருச்சிற்றம்பலம்
9.சர்தார்
10.லவ் டுடே