பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று தனுஷ் முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையே டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது. இதனால் கடந்த மாதம் வெளியாக வேண்டிய புதிய படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் 'காலா' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வருகிற ஜூன் 7ஆம் தேதி 'காலா' வெளியாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் காலாவின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது ஏன் என்பது குறித்து தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு புறம் ஜூன் 15ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் பண்டிகையை முன்னிட்டு அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே ‘காலா’ ரிலீஸ் செய்தால் நல்ல வசூல் பார்க்கலாம் என்றும், இன்னொரு புறம் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததனால் கர்நாடகாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என அங்குள்ள சில அமைப்புகள் தெரிவித்தன. இந்நிலையில் மே 12 அன்று நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலின் முடிவு மே 15 அன்று வெளியாகிவிடுவதால் அங்கு புதிய அரசு அமைப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளதாலும், மேலும் அப்படி ஆகும் பட்சத்தில் பதவி ஏற்பு போன்ற மற்ற நிலவரங்கள் எல்லாம் நடந்து முடிவதற்கு சில நாட்கள் ஆகிவிடும் என்பதால் காலாவை ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்தால் எங்கும் எந்த பிரச்சினையும் எழாது என வெளியீட்டை இந்த தேதிக்கு தள்ளி வைத்ததாகவும் படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தாக பேசப்படுகிறது.
Published on 24/04/2018 | Edited on 26/04/2018