
தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கிய கலைஞர்களுடன் நடிகர் ஆதி பினுஷெட்டி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், #Rapo19 என தற்காலிகமாக அழைக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு 'தி வாரியர்' என்று தலைபிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தி வாரியர்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.