தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா நேற்று (28.04.2023) விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்திற்கு பாலகிருஷ்ணாவும் சந்திரபாபு நாயுடுவும் பூங்கோத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பின்பு அந்த நிகழ்ச்சியில் ரஜினி தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், "இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. ஆனால், அரசியல் பேச வேண்டாம் என எனது அனுபவம் சொல்கிறது. சந்திரபாபு எனக்கு 30 ஆண்டு கால நண்பர். சந்திரபாபு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி. ‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1996 ஆம் ஆண்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. இப்போது விஷன் 2047 என்ற பெயரில் தொலைதூரத் திட்டத்துடன் அரசியலில் பணியாற்றி வருகிறார்.
என்னுடைய மற்றொரு நண்பர் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா. அவரை ரசிகர்கள் பாலகிருஷ்ணாவாக பார்ப்பதில்லை. என்.டி.ஆரின் மறு உருவமாகப் பார்க்கிறார்கள். அவர் தன் படத்தில் ஒற்றைப் பார்வையால் எதிரிகளை கொலை செய்கிறார். ஒரு கண் சிமிட்டினால் போதும். வாகனம் வெடித்து 30 அடி உயரம் வரை செல்கிறது. இதையெல்லாம் ரஜினிகாந்த், அமிதாப், ஷாருக்கானோ சல்மான் கானோ செய்ய முடியாது. நாங்கள் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பாலையா செய்தால் ஏற்றுக் கொள்வார்கள். அவர் அன்பான உள்ளம் கொண்டவர். அவர் திரையுலகிலும் அரசியலிலும் மென்மேலும் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.