தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராணா, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த பின் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா லீடர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
புதிதாக தொடங்கப்பட்ட ஓடிடி ஒன்றில் சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ராணா கலந்துகொண்ட நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “வாழ்க்கை மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நிறுத்தம் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தன. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது. சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தது. இதனால் 70 சதவீதம் ரத்தக் கசிவுக்கான, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தான் ராணாவுக்கும், மிஹிகா பஜாஜுக்கும் திருமணம் முடிந்தது. இதற்கு நடுவில் ராணா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால், இவை புரளிகள் என ராணா தெளிவுபடுத்தியிருந்தார்.