உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலை புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்குப் பலர் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள். உடலைப் புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து நடிகர் விஜயகாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தரவில்லை என்றாலோ, பிரச்சனை செய்தாலோ தன்னுடைய சொந்தக் கல்லூரியில் இடம் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்தின் இந்தச் செயலைப் பாராட்டி தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூகத்திற்காகச் சேவை செய்து தன் உயிரை இழந்த ஒரு மருத்துவரை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பெரிய கலவரம் நடந்துள்ளது. நமது சென்னையில் அதுவும் மக்களைக் கரோனாவிடம் இருந்து காப்பாற்றப் போராடிய ஒருவருக்கே இந்த நிலைமை. ஏனெனில், மக்கள் இங்கே யாருக்கு என்ன ஆனால் நமக்கென்ன? நாம் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலமாகச் சிந்திக்க ஆரம்பித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.
ஆனால் இப்படி ஒரு நிலைமையில் ஒரு அதிசயப் பிறவியாய் ஒருவர், 'என் நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்யுங்கள்' என்று சொல்லி இருக்கிறார். அந்த தங்க மனசுக்குச் சொந்தக்காரர்தான் கேப்டன்.
சினிமாவில் கஷ்டப்பட்டுப் போராடி அந்த இடத்தை அடைந்தவர் கேப்டன். அவர் வீட்டுக்கு யார் போனாலும் அவர்களைச் சாப்பிடவைத்துதான் அனுப்புவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனையோ பேருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட இப்போது விஜயகாந்த் உதவுவதாகச் சொல்லியிருக்கும் விஷயம் மிகப்பெரியது. வாழ்வதற்கே உதவாத மக்கள் இருக்கும் இந்த உலகத்தில் இறந்தவர்களை நிம்மதியாகப் போகவிடுங்கள். அதற்கு என் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அவரை எல்லோரும் குழந்தை மனசுக்காரர் என்று சொல்வார்கள். நான் கடவுள் மனசுக்காரர் என்று சொல்கிறேன். கடவுளும் குழந்தையும் ஒன்றுதானே.
ஏனெனில், எல்லாத் தெய்வங்களின் ஆலயமும்... கோயிலும் மூடியிருக்கும்போது யார் உதவினாலும் அவர்கள் கடவுள்தானே. நீங்கள் பழைய கேப்டனாக மீண்டு வர வேண்டும். உங்கள் சேவைகள் இன்னும் இந்த நாட்டுக்குத் தேவை".