
பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான 'பட்டியல்' படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமாகமானார் சேகர். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தை ஆவார். 63 வயதாகும் பட்டியல் சேகர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் பட்டியல் படத்தை தயரித்ததனால் 'பட்டியல் சேகர்' என்று அழைக்கப்பட்டார். இவர் 'பட்டியல்' படம் தவிர 'கழுகு' மற்றும் 'அலிபாபா' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். அத்துடன், 'ராஜ தந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 'பட்டியல்' சேகர், கடந்த ஒரு வார காலமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 7.30 மணிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.