
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ''நாங்கள் கேஜிஎஃப் பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகின்றன. சொல்ல முடிந்த அனைத்தையும் கதையாக சொல்லி இருக்கிறேன். அனைவரும் படம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க இயலாது. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றிபெறச் செய்து, கன்னட சினிமாவிற்கு இந்திய திரையுலகில் முக்கிய இடத்தைப் பெற்று தந்ததற்கு அனைவருக்கும் நன்றி. என்னுடன் சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் கேஜிஎஃப் படைப்பு உருவாக சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறுவேன். கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுபவர்களுக்கும் நன்றி'' எனக் கூறினார்.