கர்நாடக மாநிலம், புலிகேஷி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் மதரீதியிலான விமர்சனம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சமூக வலைதள பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூடிய ஒரு கும்பல், எம்.எல்.ஏ.வின் வீட்டை தாக்கியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தது. சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். டி.ஜே. ஹள்ளி, கே.ஜே.ஹள்ளி எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
அதேபோல் போலீஸ் காவல் ஆணையர் உட்பட 60 பேர் இந்த கலவர சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கலவரம் குறித்து பல்வேறு திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இக்கலவரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"பெங்களூர் கலவரம் காட்டுமிராண்டித்தனத்தை தவிர வேறில்லை. இந்த மத வெறியை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தூண்டுபவர் மற்றும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்த குண்டர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு சமூகமாக நாம் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறியுள்ளார்.