Skip to main content

"வகுப்புவாத அரசியல்; 40% ஊழல் அரசு" - வாக்களித்த பின் பிரகாஷ்ராஜ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

prakash raj tweet after his voting

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

 

தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்கு எண்ணிக்கை மே 13 அன்று நடைபெறுகிறது.

 

காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்பு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காலை வணக்கம் கர்நாடகா. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும் 40% ஊழல் அரசிற்கு எதிராகவும் வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

கர்நாடகத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பொதுப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதை முன்வைத்தே எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், நேற்று கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன; மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜும் இதனைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்