நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (29/05/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "ஆ... இல்லை...! மிகவும் வலிக்கிறது. செய்வதறியாது தவிக்கிறேன். நண்பர்களையும், குடும்பத்தினரையும் ஒவ்வொன்றாக இழந்துவருகிறேன். அவர்களின் நினைவுகளுடன் வாழ்க்கையை வாழ கடிமனாக இருக்கப்போகிறது. என் வாழ்க்கையில் நீ ஒரு அங்கமாக இருந்ததற்கு நன்றி வெங்கட். உன்னோடு இருந்த நாட்களை மிஸ் செய்கிறேன். உன் ஆத்மா சாந்தியடையட்டும்"என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.