மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே தீர்ப்பில் ராகுல் காந்தி, இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்துகொள்ள 30 நாட்கள் அவகாசம் தந்தும் உத்தரவிடப்பட்டது. ஆனால், தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி நாடாளுமன்றச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான்கு முறை எம்.பியாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், "இந்த கொடுங்கோலர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற விரும்பும் ஒவ்வொரு இல்லமும் உங்கள் வீடு. இந்தியாவே உங்கள் வீடு.. நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள். உங்களுக்கான ஆற்றல் அதிகம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.