
'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘டிராகன்’ படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படக்குழு தியேட்டர் விசிட் அடித்து வருகிறது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் தியேட்டர் விசிட் அடித்த படக்குழு தற்போது ஹைதராபாத்திலும் தொடர்ந்து வருகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகளவில் ரூ.50 கோடியை இப்படம் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியுள்ளார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்த நிலையில் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன், “நான் எப்போதும் சொல்வது போல வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு நன்றி அமீர்கான் சார். அந்த வார்த்தைகளை வாழ்நாள் முழுவதும் நினைவில் போற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட இந்தி ரீமேக்கில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் கான் தனது தாய் மருத்துவமனை சிகிச்சை காரணமாக சென்னையில் இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.