
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நகர்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்தது. இது தொடர்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன், சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா நான்காம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், சூர்யா ஆகிய நடிகர்களுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.