எழில் இயக்கத்தில் கௌதம் கார்த்தி, சாய் பிரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள யுத்த சத்தம் திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் பார்த்திபன் பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் எழில் மிகவும் யதார்த்தமான மனிதர். சில வருடங்களுக்கு முன்பு நான் நடித்த ஒரு படத்தில் கதையிலும் அதிகம் பங்களித்தேன். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த இயக்குநர் எல்லாவற்றையும் அவரே செய்ததுபோல காட்டிக்கொள்வார். நான் எழுதிய டயலாக்கையே என்னிடம் வந்து புதிதாக சொல்லிக்கொடுப்பதுபோல கூறுவார். சிலர் மேடையிலேயே இந்தப் படத்தில் நான் பார்த்திபனை வித்தியாசமாக நடிக்க வைத்திருக்கிறேன் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ஆட்களுக்கு மத்தியில் நான் டயலாக்கை எந்ததெந்த இடத்தில் எல்லாம் திருத்தினேன் என்று இயக்குநர் எழில் மிக யதார்த்தமாக கூறினார். தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளவர்களால் மட்டும்தான் இப்படி நேர்மையாக நடந்துகொள்ள முடியும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு போதை இருக்கும். வழக்கமான கமர்ஷியல் படங்கள் பண்ணாமல் வேறுவிதமான படங்கள் பண்ணுவதில்தான் எனக்கு போதை உள்ளது. ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு வருடங்கள் கழித்து எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. 1897இல் தொடங்கப்பட்ட சினிமா வரலாற்றில் லீனியர் வகையில் சிங்கிள் ஷாட் படங்கள் சில உள்ளன. ஆனால், நான்-லீனியரில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் நான் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் இரவின் நிழல் திரைப்படம்தான். எந்தவித கட்டும், ஒட்டும் இல்லாமல் 100 நிமிடங்கள் ஓடக்கூடியது இரவின் நிழல். பத்து வருடங்களாக போராடி, 90 நாட்கள் ஒத்திகை பார்த்து, மிகப்பெரிய பொருட்செலவில் 64 ஏக்கரில் 58 செட் போட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.
தற்போது அந்தப் படத்திற்கு வந்த சோதனை என்னவென்றால் கான்ஸ் திரைப்பட விழாவில் படம் பார்த்தவர்கள் இது சிங்கிள் ஷாட் ஃபிலிம் இல்லை என்று கூறிவிட்டார்கள். சிங்கிள் ஷாட் ஃபிலிம் என்று நம்பமுடியாத வகையில் நான் எடுத்த படம் இருப்பது எனக்கு பெருமைதான். ஆனாலும், இதை எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லை. நாம் முழுமூச்சோடு ஒரு படத்தை எடுத்தாலும் வேறு ஏதாவது வகையில் இது மாதிரியான பிரச்சனைகள் வருகின்றன" எனப் பேசினார்.