
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 2018ஆம் ஆண்டு முதல் ‘பி.கே.ரோஸி திரைப்பட விழா’ ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நேற்று 6ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்ட ‘சந்தோஷ்’ படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்படம் திரையிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து நிறைவு நாள் விழாவில் பேசிய பா.ரஞ்சித் படத்தை திரையிட ஜெயிலுக்கு போகவும் தயார் என சொல்லியுள்ளார்.
பா.ரஞ்சித் பேசியதாவது, “இந்த விழாவில் சில படங்கள் திரையிடக்கூடாது என பிரச்சனை வந்தது. போலீஸ் தரப்பில் நேற்று நோட்டிஸ் ஓட்டினர். அதோடு விழாவுக்கான லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என் மிரட்டல் வந்தது. சந்தோஷ் படத்தை இங்கு திரையிடவில்லை என்றால் வெளியில் திரையிடுவோம். அதற்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார். ஜெயிலுக்கு கூட போக ரெடி. ஜெயிலுக்கு போனால் புத்தகங்களை படிக்கலாம். அங்கு இருக்கிற சூழல் வித்தியாசமானதாக இருக்கும். அதனால் கைதாவதற்கு தயாராக இருக்கிறோம்” என்றார்.
பாலிவுட் நடிகைகள் ஷஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவான இந்தி படம் ‘சந்தோஷ்’. இப்படத்தை இந்தியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியது. இப்படத்தை இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த இயக்குநர் சந்தியா சூரியின் இயக்கியுள்ளார். இப்படம் இந்தாண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் இங்கிலாந்து நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டது. ஆனால் விருது பெறவில்லை.
இப்படம் இந்தியாவில் நீண்ட மாதங்களாக வெளியாகாமல் இருந்தது. ஒரு வழியாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதித்தது சென்சார் போர்ட். அதற்கு காரணமாக இப்படம் இஸ்லாமிய வெறுப்பு, சாதி வெறி, பெண் வெறுப்பு மற்றும் வன்முறையை போற்றும் வகையில் இருப்பதாக கூறினர். மேலும் பல காட்சிகளை நீக்க சென்சார் போர்ட் வலியுறுத்திய போது படக்குழு மறுத்தால் இப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.