அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. இவ்வருடத் தொடக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, தெலுங்கு ரீமேக் உரிமையை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது.
கரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. தற்போது நிலைமை சீரடைந்து இயல்புநிலை திரும்பி வருவதால் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .
தெலுங்கிலும் அஷ்வத் மாரிமுத்து இயக்க, படத்திற்கான வசனங்களைத் தருண் பாஸ்கர் எழுதுகிறார். அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் விஸ்வாக் சென் நடிக்கவுள்ளார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.