'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின்போது அப்படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவிற்கும் இடையே மோதல் உண்டானது. மைக்கேல் ராயப்பன் போல மேலும் மூன்று தயாரிப்பாளர்கள் சிம்புவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சிம்புவிற்கு நடிக்கத் தடை விதித்து ரெட் கார்டு விதித்தது. இதனைத் தொடர்ந்து, சிம்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே இருந்த பிரச்சனை, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பிற்கு இடையேயான பிரச்சனையாக மாறியது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் பெப்சி அமைப்பின் தொழிலாளர்கள் கலந்துகொண்டது தயாரிப்பாளர் சங்கத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பும் பெப்சி அமைப்பும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுவந்த நிலையில், தற்போது இரு தரப்பும் அமர்ந்து பேசி சுமுக தீர்வை எட்டியுள்ளனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை எட்ட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, சிம்புவிற்கு விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீக்கத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு எவ்வித பிரச்சனைகளுமின்றி திரைப்படங்களில் நடிக்க முடியும் என்பதால் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பித்துள்ளனர்.