இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜன் அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெயரில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் இளைஞர்கள் மத்தியில் இவரின் இந்த பதிவு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..🙏🙏🙏— N.Nataraja Subramani (@natty_nataraj) June 19, 2022