பாகுபலி பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் வேறு ஒரு தளத்திற்கு சென்றது. அதை பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாஹோ படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்த படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை.
இதனை தொடர்ந்து பிரபாஸின் 20வது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் 20 என்று அழைக்கப்படும் இந்த படத்தை கே கே ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தெலுங்கு சினிமா துறையில் மிக பிரபலமான மற்றும் பழமையானதுமான வைஜெயந்தி மூவிஸ், தெலுங்கு சினிமா துறையில் தனது 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஷ்வின். அவரது மனைவியும், வவைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகளுமான ப்ரியங்கா தத் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தனர்.
லாக்டவுன் சமயத்தில், இந்த படத்தில் பிரபாஸுடன் நாயகியாக நடிக்க போகிறவர் தீபிகா படுகோன் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் எத்தகையது என்பது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “இது ஒரு சின்ன ரோலோ அல்ல கெஸ்ட் ரோலோ இல்லை. படம் முழுவதும் அவர் இருப்பார். முதலில் இந்த கதையை யோசித்தபோது அமிதாப் பச்சன் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரைதான் தலைப்பாக வைத்து தொடங்கினேன். அந்தளவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். கண்டிப்பாக நீங்கள் எங்களுக்காக ஒதுக்கிய நேரம் வீண் போகாது” என்று தெரிவித்துள்ளார்.