மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன், மிஷ்கின், ராம், நெல்சன் உள்ளிட்ட பலரும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், சூரி, த்ருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் பாரதிராஜா மற்றும் சிம்பு ஆகியோர் காணொலி வாயிலாகப் பேசி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசுகையில், “எப்போதுமே ஒரு நூற்றாண்டில் முதல் பாதி அல்லது கடைசி பாதியில் ஒரு பெரிய மாற்றம் நடக்கும். அது போல இந்த ஆண்டில் ஒரு மாற்றம் இந்தியாவில் நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குநர்கள் உலக சினிமா கதவை தட்டினார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு வாழை, கொட்டுக்காளி என இரண்டு படங்களும் உலக கதவை தட்டும். ஒரு குழந்தையின் வலியை வாழை படத்தில் மாரி செல்வராஜ் காண்பிச்சிருக்கான். அதனால் இது சோகப் படமா எனக் கேட்டால் இல்லை. எனக்குத் தெரிந்து கடந்த 10 வருஷத்தில் நான் பார்த்த சந்தோஷமான படம் வாழைதான். ஒரு இயக்குநருக்கு அவருடைய முதல் படம் எப்போதுமே தோல்வி படம்தான். வணிக ரீதியில் ஜெயித்துவிடும். ஆனால் கலையில் ஒரு இயக்குநருடைய முந்தைய படம் எப்போதுமே மோசமான படம். ஆனால் மாரி செல்வராஜ் அவர் வாழ்நாளில் இந்தப் படத்தை விட ஒரு சிறந்த படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் இந்தப் படத்தில் உண்மை இருக்கிறது. இந்தப் படத்தை ஒரு தாய் பால் போல மாரி செல்வராஜ் சொல்லியிருக்கிறார்.
அகிரா குரோசாவா சொல்வார், இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பதேர் பாஞ்சாலி படத்தைப் பாருங்கள் என்று. ஆனால் நான் சொல்கிறேன், தமிழ்நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வாழை படம் பாருங்கள். இந்த படம் ஒரு பாடம். நம்ம வாழ்க்கையில் அம்மா, தங்கச்சி எல்லாத்தையும் விட்டுவிட்டு சொந்தமில்லாத ஒரு சொந்தமாக டீச்சரை பார்ப்போம். அந்த டீச்சரை காளியாகப் பார்ப்பதா அல்லது தேவியாகப் பார்ப்பதா என்ற குழப்பம் இருக்கும். எனக்குத் தெரிந்து இந்தியாவில் குழந்தைக்கும் டீச்சருக்குமான உறவை எந்த படமும் இந்தப்படம் அளவிற்குக் காண்பித்ததில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “போன மேடையில் கொட்டுக்காளி படத்தை பற்றி பேசும் போது, ஒரு குத்து டான்ஸ் ஆடுவதாகச் சொன்னேன். அதற்கு பெரிய மரியாதை கிடைத்தது. ஒரு 50 பேர் வீடியோ போட்டு திட்டுனாங்க. நண்பர்களே மேடையில் பேசுவதைவிடப் போரான விஷயம் எதுவுமே கிடையாது. இந்த இரண்டு படங்கள் என்னுடைய வாழ்க்கையை உருட்டி போட்டுவிட்டது. என் நாக்கை சுருட்டி போட்டுப் பேசமுடியாமல் செய்துவிட்டது. அதையும் மீறி பேசும் போது, அடுத்த வார்த்தை என்ன எனத் தெரியாமல் பேசுகிறேன். அடுத்த வார்த்தை தெரிந்து பேசினால் நால் நல்லா பேசினேனா, அல்ல மற்றவர்கள் நல்லா பேசினார்களா என்று தோன்றிவிடும். அதனால் நான் கெட்ட வார்த்தை பேசுவதைத் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். உடனே நான் தண்ணி போட்டுவிட்டதாக சொல்வார்கள். நான் தண்ணி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. ஒர்க்கவுட் பண்ணிகிட்டு இருக்கேன். இந்தியாவில் சிக்ஸ் பேக் உள்ள முதல் இயக்குநர் நான் தான். ஒரு சில படங்கள் மக்களால் சாகிறவரைக்கும் மறக்கமுடியாது. அது போல ஒரு படம் தான் வாழை. இந்த படத்தை ஓடிடியில் வந்த பிறகு உலகத்தில் உள்ள எல்லாருமே பார்ப்பார்கள். எந்த நாட்டிலெல்லாம் வாழை இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் இந்த படத்தை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். கலையரசன் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சூரி அளவு இல்லை. ஆனால் சூரி பக்கத்தில் வந்திருக்கிறார்” என்றார்.